வடக்கில் புதிதாக நூற்றுக்கணக்கான விகாரைகள் - Yarl Thinakkural

வடக்கில் புதிதாக நூற்றுக்கணக்கான விகாரைகள்

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல் இது வரையான 9 வருடங்களில் மட்டும் வட மாகாணத்தில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு 67 விகாரைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தெரிவித்தார். வடக்கில் திட்டமிட்டு சிங்கள-பௌத்த மேலாதிக்கம் திணிக்கப்படுவது இதன்மூலம் அம்பலமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு  வருகின்றன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வடமாகாணத்தில் 131 விகாரைகள் போருக்கு பின்னரான 9 வருடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் 6, கிளிநொச்சியில் 3, மன்னாரில் 20  வவுனியாவில் 35, முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் இவ்வாறு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்;கப்பட்டுள்ளன எனவும் ரவிகரன் தெரிவித்தார்.

இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்களே பல இடங்களில் எமக்கு கூறியுள்ளார்கள். இனிமேலாவது வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் எனவும் ரவிகரன் வலியுறுத்துகின்றார்.


Previous Post Next Post