மானிப்பாயில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு: நால்வர் காயம் - Yarl Thinakkural

மானிப்பாயில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு: நால்வர் காயம்

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள லோட்டன் வீதியில்
நேற்று வியாழக்கிழமை காலை 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று இரு வீடுகளுக்குள் அத்துமீறி வாளால் வெட்டியும், கொத்தியும், பெற்றோல் குண்டு வீசியும் பெரும் வெறியாட்டத்தில் ஈடுபட்டது.

வாள்வெட்டுக் குழுவின் வெறியாட்டத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். வள்வெட்டில் இளைஞன் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது.
லோட்டன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்றுக் காலை அத்துமீறிய வன்முறைக் கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை வாளால் வெட்டி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
அத்துடன் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் இக்கும்பல் தீவைத்து எரித்தது. தாக்குதல் நடத்தில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களையும் இந்தக் கும்பல் அடித்து நொருக்கியடன், வீட்டின் கதவைக் கொத்திச் சேதப்படுத்தியது. வீட்டின் தளபாடங்களையும் இக்கும்பலைச் சேர்ந்தோர் அடித்து நொருக்கினர்.

இதனையடுத்து அருகே மற்றொரு வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தோர், அந்த வீட்டில் இருந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.

இதில் இளைஞனின் கையில் பலத்த வெட்டு விழுந்து அவரது கை துண்டாடப்பட்டது. சகோதரனை வெட்ட முயன்றபோது தடுக்க முயன்ற போதே சகோதரி கையிலும் வெட்டு விழுந்தது.

வாள்வெட்டில் இருவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாள்வெட்டில் காயமடைந்த 19 வயது இளைஞன் டயஸ் மற்றும் 21 வயதான அவரது சகோதரி டிவிசா ஆகியோர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அட்டகாசம் செய்த வன்முறைக் கும்பலில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தெரியவருகிறது. இதேவேளை, வன்முறைக் கும்பல் முதலில் புகுந்து அட்டகாசம் செய்ய வீட்டினைச் சேர்ந்த இளைஞன் கடந்த காலங்களில் வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்பினை பேணி வந்தவரென கூறப்படுகிறது.

அதன் பின்னர் அந்தக் குழுக்களில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் வாள்வெட்டுக் குழுக்களை சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார் என வன்முறைக் கும்பல் நம்புவதாகவும் தெரியவருகிறது.

இதனால் அவரை பழிவாங்கும் முயட்சியாகவே நேற்று இரண்டாவது தடவையும் அவர் வீட்டின் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைளையும் மானிப்பாய் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  இதேவேளை , நீண்ட நேரமாக அங்கு நின்று அட்டகாசம் புரிந்த இந்தக் கும்பல்,  வீட்டில் இருந்து வெளியேறி கைகளில் வாள்களுடன் வீதியில் மிகச் சாதாரணமாக சென்றதாக ம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
Previous Post Next Post