யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு: இளைஞன் பலி - Yarl Thinakkural

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு: இளைஞன் பலி


மல்லாகம் சந்தி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞன் குளமங்கால் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (வயது-32) என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த பகுதிக்கு சுன்னாகம் பொலிஸார் சென்றுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் கடும் முயற்சி மேற்கொண்டனர். எனினும் பொலிஸாரின் உத்தரவை  மீறி குறித்த குழுவினர் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சுதர்சன் என்ற குறித்த இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாள்வெட்டில் காயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படடது.இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீது மேற்படி உயிரிழந்த நபர் வாளால் வெட்டுவதற்கு முற்பட்டுள்ளதுடன், பொலிஸ் சார்ஜனின் கைத்துப்பாக்கியை பறித்தெடுப்பதற்கு முயற்சித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக தெரிவித்தனர். அத்துடன்  சம்பவ  இடத்தில் இருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக   விசாரணைகளை  பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின்  உத்தரவிற்கு  அமைய  வடமாகாண   சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு சென்ற மல்லாகம் நீதிவான் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார். இதனையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு முதல் குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு;ள்ளனர்.
     
 
Previous Post Next Post