கர்நாடக முதல்வரை சந்தித்த கமல்ஹாசன் - Yarl Thinakkural

கர்நாடக முதல்வரை சந்தித்த கமல்ஹாசன்


கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயற்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகம், கர்நாடகம் இடையே 40ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இரு மாநில நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசுவதாக அறிவித்தார்.
இதற்கமைய கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்ற போது அந்நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

கர்நாடக முதல்வரை மீண்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கமல்ஹாசன் கடிதம் எழுதினார். அதையேற்ற குமாரசாமி நேற்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதிலனுப்பினார்.

இதையடுத்து கமல்ஹாசன் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களுர் சென்றார். இரவு ஹோட்டலில் தங்கினார். இன்று பெங்களுர் முதலமைச்சரின் அதிகாரபூர்வ கிருஷ்ணா இல்லம் சென்ற அவரை குமாரசாமி வரவேற்று அழைத்து சென்றார்.

குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார். குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.
Previous Post Next Post