95ஆவது பிறந்த நாளை கொண்டாடிய கருணாநிதி - Yarl Thinakkural

95ஆவது பிறந்த நாளை கொண்டாடிய கருணாநிதி

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை முன்னிட்டு தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் தி.மு.க.வினரால் நடத்தப்பட்டது.
இதற்கான ஆயத்தப் பணிகள் பல்வேறு இடங்களில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டின் முன்பும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மலர்களாலும், கட்சிக் கொடிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டன.
இதேபோல் தி.மு.க.வின் மாவட்ட அலுவலகங்களிலும், கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல இடங்களில் அன்னதானம், இரத்ததானம், நலத்திட்டங்கள் வழங்குதல், கவியரங்கு, கருத்தரங்கு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 500இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பு இன்று காலை திரண்டனர்.
கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே தொண்டர்களை சந்திக்க வந்தார். அப்போது ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், கனிமொழி, அ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொண்டர்களை பார்த்த கருணாநிதி கையசைத்தார். தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தலைவா வாழ்க, நூறாண்டு காலம் கடந்து வாழ்க என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
Previous Post Next Post