புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து: 48பேர் பலி - Yarl Thinakkural

புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து: 48பேர் பலி


ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180இற்கும் மேற்பட்ட குடியேறிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48பேர் பலியாகியுள்ளனர்.

உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து கடல் வழியாக அகதிகள் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். 

இந்நிலையில் ஒரு சிறிய மரப் படகில் 180இற்கும் மேற்பட்டோர் ஐரோப்ப நாடுகளுக்கு செல்வதற்காக துனிசியாவின் தென் கரையோர தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர்.

படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்ததால் படகு கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 48பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 47பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 68பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இராணுவ விமானம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Previous Post Next Post