வெடித்து சிதறிய எரிமலை: 25 பேர் பலி - Yarl Thinakkural

வெடித்து சிதறிய எரிமலை: 25 பேர் பலி

மத்திய அமெரிக்காவிலுள்ள குவாட்டமாலா என்ற நாட்டில் பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதில் 25பேர் பலியானதுடன், 300பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா நகருக்கு தென்-மேற்கு திசையில் 40கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.

பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், வசித்தவர்களும் தீயில் சிக்கி பலியானதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.

எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலினால் குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தேசியளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி  ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு இதுவென அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்து விட்டது. அதே வேளையில் லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் அந்நாட்டு வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post