தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் - Yarl Thinakkural

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொலிஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13பேர் உயிரிழந்தனர்.
தமிழக அரசின் இந்த கொடூர செயலை கண்டித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் தோழமை கட்சிகள் சென்னையின் பல இடங்களில் மறியல்  போராட்டம் நடத்தின.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினர். எழும்பூரில் கனிமொழி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கறுப்பு கொடி ஏந்தி ஊர்வலம் சென்று கொண்டே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை பொலிஸார் கைது செய்தனர். முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னையில் பாதுகாப்பு பணியில் 20ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பேருந்து, ரயில் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Previous Post Next Post