உறவுகளை நினைவுகூர அழைக்கும் சம்பந்தன் - Yarl Thinakkural

உறவுகளை நினைவுகூர அழைக்கும் சம்பந்தன்

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஒன்றுதிரண்டு உயிர்நீத்த எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவு கூரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர் வாழ்நாளில் கறுப்பு நாளான - செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாளான - மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாளான மே-18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை நடத்தவுள்ளது.இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில், இறுதிப் போரில் அரச படைகளின் பலவிதமான தாக்குதல்களினால் எமது உறவுகள் பலர் சாகடிக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் எதுவுமின்றி சர்வதேச போர்விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் நடைபெற்றது.
மஹிந்த ஆட்சியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போது நான் நாடாளுமன்றில் பல உரைகளை ஆற்றியிருந்தேன்.
போரை உடன் நிறுத்தும் படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கேட்டிருந்தேன். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துத்தான் அரசு போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இதனால் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். எமது மக்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு சர்வதேசத்தை இன்று நாம் கோரி நிற்கின்றோம். தமிழின அழிப்பு தினமாகவும், தமிழ்த் தேசிய துக்க நாளாகவும் மே 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு பங்கேற்க வேண்டும்.
இறுதிப் போரில் இழந்த எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூர வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் ஊடாக போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும் என குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post