பற்றி எரியும் தூத்துக்குடி: மீண்டும் சூடு - Yarl Thinakkural

பற்றி எரியும் தூத்துக்குடி: மீண்டும் சூடுதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது இன்று மீண்டும் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11பேர் பலியானதுடன், 75இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தூத்துக்குடி அரச மருத்துவமனையில் இன்று காலை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பிரதே பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரச மருத்துவமனையில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்தனர்.


மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பிரேத பரிசோனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை எழுப்பினர். இந்நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் மருத்துவமனைக்கு முன்பு கூடியிருந்த மக்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர். இதில் மருத்துவமனை வாசலில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர்.
இதைதொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.மற்றொரு பேருந்தின் கண்ணாடிகள் நொருக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பொலிஸாரும் தடியடி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் 22வயதுடைய  இளைஞன் உயிரிழந்தார். மேலும் 5பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Previous Post Next Post