தூத்துக்குடியில் வெடித்தது வன்முறை: ஆறு பேர் பலி - Yarl Thinakkural

தூத்துக்குடியில் வெடித்தது வன்முறை: ஆறு பேர் பலிதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டத்தில் 100ஆவது நாளான இன்று கலவரம் வெடித்தது. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவி உட்பட 6பேர் பலியாகினர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று போராட்டம் 100ஆவது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கட்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் 144தடை உத்தரவை பிறப்பித்தார்.
ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட இலட்சக்கணக்கான மக்களை திரண்டதால் தடுத்த நிறுத்த முடியாமல் பொலிஸார், தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆறு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

Previous Post Next Post