தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி - Yarl Thinakkural

தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த், காயமடைந்தவர்களுக்கு ரூ.10ஆயிரம் நிதியுதவி அளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 இலட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13பேர் பலியாகினர். 75இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தார். காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்ற ரஜினிகாந்த் காரில் ஊர்வலமாக மருத்துவமனை நோக்கி சென்றார். போகும் வழியில் திறந்த நிலையிலிருந்த காரில் மக்களை பார்த்து கையசைத்தவாறு அவர் சென்றார்.
மருத்துவமனைக்கு சென்ற ரஜினி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 48நபர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதியுதவி அளித்தார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 இலட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

Previous Post Next Post