வாள்வெட்டு கும்பலுக்கு உதவிய பொலிஸார் சிக்கினார் - Yarl Thinakkural

வாள்வெட்டு கும்பலுக்கு உதவிய பொலிஸார் சிக்கினார்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவர்களுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டை அடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்டார் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டு வன்முறைகளை கட்டுப்படுத்த கடந்த மாத இறுதியில் பொலிஸாரின் விடுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு கும்பல்களை இலக்கு வைத்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.
எனினும் பொலிஸார் வருவதை முன்னாடியே அறிந்து கொள்ளும் சந்தேகநபர்கள் இடமாறி விடுவார்கள். அவர்களுக்கு பொலிஸிலிருந்தே தகவல்  வழங்கப்படுவதாக சந்தேகம் கொண்ட பொலிஸார், அது தொடர்பில் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தனர்.
அதுதொடர்பில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் குழு விசாரணை நடத்தியது. வாள்வெட்டுக் கும்பல்களுக்கு பொலிஸ் இரகசியத் தகவல்களை பொலிஸ் உத்தியோகத்தர் தொலைபேசி ஊடாக வழங்கி வந்தமை விசாரணையில் அறியவந்தது.
அதனையடுத்து கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post