கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு - Yarl Thinakkural

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். கர்நாடகத்தில் அறுதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க.வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார்.
மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 9மணியளவில் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  பதவி ஏற்பு விழாவில் ஏனைய அமைச்சர்கள் எவரும் பதவியேற்கவில்லை.
பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகத்தில் உள்ள 222தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் திகதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78இடங்களும், பா.ஜ.க.வுக்கு 104இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37இடங்களும், ஏனைய கட்சிகளுக்கு 3இடங்களும் கிடைத்தது.
தனிப் பெரும்பான்மை எக்கட்சிக்கும் கிடைக்காத நிலையில், பா.ஜ.க. மட்டுமே தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பா.ஜ.க.வினர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post