கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நேரலையில் தோன்றினார் - Yarl Thinakkural

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நேரலையில் தோன்றினார்

உக்ரைன் தலைநகர் கீயபிலில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஊடகவியலாளர் ஆர்கடி பாப்சென்கோ, தொலைக்காட்சி நேரலை ஒன்றில் உயிருடன் தோன்றியுள்ளார். குறித்த ஊடகவியலாளரை கொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இந்த கொலை நாடகம் நடத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு வையின் தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய பாதுகாப்பு பிரிவின் சார்பில் அவரைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக உக்ரைன் பாதுகாப்பு சேவைகள் பிரிவின் தலைவர் வசிஸ் ரிஸ்ஸக் தெரிவித்தார்.

ஊடகவியலாளரை கொலை செய்ய உக்ரைன் குடிமகன் ஒருவரை ரஷ்யர்கள் பணியமர்த்தி செயற்பட்டதாகவும், அந்நபர் முன்னாள் படை வீரர்கள் உட்பட பலரை அணுகியதாவும், கொலை செய்ய 30ஆயிரம் டொலர் வரை தருவதாக அவர் கூறியதாகவும் ரிஸ்ஸக் தெரிவித்தார். அவ்வாறு அணுகப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இரகசியம் வெளிப்பட்டதாக அவர் கூறினார்.

பாப்சென்கோ உயிருடன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புறம் சுடப்பட்டு தனது வீட்டு வாசலில் இரத்த வெள்ளத்தில் அந்த ஊடகவியலாளர் கிடந்தததை அவரின் மனைவி பார்த்ததாகவும், பின் அவர் அவசர ஊர்தியில் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொலை ஒரு நாடகம் என்பது தனது மனைவிக்கே தெரியாது என்றும் தனது மனைவியிடம் மன்னிப்பு கோருவதாகவும் பாப்சென்கோ தெரிவித்தார். தன்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஒரு மாதத்துக்கு முன்பே தனக்குத் தெரியும் என அவர் கூறினார். தொலைக்காட்சி நேரலையில் ஊடகவியலாளர் பாப்சென்கோ தோன்றியதும் பெரும் கரகோஷம் எழுப்பப்பட்டது.

Previous Post Next Post