மாலி அகதிக்கு பிரான்ஸில் அடித்த அதிர்ஸ்டம் - Yarl Thinakkural

மாலி அகதிக்கு பிரான்ஸில் அடித்த அதிர்ஸ்டம்


பாரிஸில் 4ஆவது மாடியில் தொங்கிய குழந்தையை பாய்ந்து சென்று காப்பாற்றிய மாலி நாட்டை சேர்ந்த வாலிபருக்கு ஜனாதிபதி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் பிரான்ஸ் குடியுரிமை அவருக்கு உடனே வழங்கப்பட்டது.
மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அவர் பாரிஸில் வடக்கு பகுதி வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டடத்தின் 4ஆவது மாடி படியை பிடித்தவாறு 4வயது குழந்தை அழுதவாறு தொங்கிக் கொண்டிருந்தது.
அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
எனினும் எவ்வித தயக்கமும் இன்றி குறித்த இளைஞன் “பைடர் மான்” போன்று கட்டடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தவாறு பாய்ந்து நான்காவது மாடிக்கு சென்றார்.
பின்னர் மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை இளைஞன் காப்பாற்றி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
“ஸ்பைடர் மான்” பாணியில் குழந்தையை காப்பாற்றிய இளைஞனை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையும் வழங்கப்பட்டது.
Previous Post Next Post