‘காலா’ பட இசை வெளியீடு நாளை - Yarl Thinakkural

‘காலா’ பட இசை வெளியீடு நாளை


ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 8,500பேருக்கு இவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இதை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது. அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் ரஜினிக்கு நெருக்கமான முக்கிய திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். அதோடு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மொத்தம் 8,500பேருக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் ரஜினி தனது ‘காலா’ பட அனுபவங்கள், படத்தில் இடம்பெற்றுள்ள 9பாடல்கள் தொடர்பான சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, முக்கிய அரசியல் விடயங்கள் குறித்தும் பேசுவார். கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்குவார் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

Previous Post Next Post