சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் - Yarl Thinakkural

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள்



ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் குறித்து ஆச்சரியமளிக்கும் கடிதம் ஒன்றை அமெரிக்க இராணுவ வீரர் வெளியிட்டுள்ளார்.
ஈராக்கில் பேராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக கூறி சதாம் உசைனை அமெரிக்கா தூக்கிலிட்டு கொலை செய்தது. சதாம் தூக்கிலிடப்படும் போது அவர் அருகில் இருந்த அமெரிக்க இராணுவ வீரர் அவரது வாழ்க்கையின் இறுதி நிமிடங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
சதாம் உசைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் அவரை சுற்றியிருந்த காவலர்களில் ஒருவரை அழைத்துள்ளார். அவரிடம் தான் கைது செய்யப்படும் போது அணிந்திருந்த கனத்த ஆடையை தருமாறு கேட்டுள்ளார்.
ஏன் ஆடையை கேட்கின்றீர்கள் என காவலர் கேட்டுள்ளார். அதற்கு சதாம், அதிகாலையில் எனது உயிரை பறிக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். நான் மரணத்தை கண்டு பயப்படவில்லை. நடுங்கவும் இல்லை. எனினும் ஈராக்கில் அதிகாலை நேரம் நடுங்க வைக்கும் குளிரை கொண்டதாக இருக்கும்.
அந்நேரம் என்னை தூக்கு மேடைக்கு நீங்கள் அழைத்து செல்லும் போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம். அதை பார்ப்பவர்கள் சதாம் மரணத்துக்கு அஞ்சக்கூடியவன் என்று எண்ணி விடுவார்கள்.
எனவே நான் தூக்கு மேடையை நோக்கி நடந்து செல்லும் போது குளிரினால் கூட எனது உடல் நடுங்கக்கூடாது என்று நான் கருதுவதாலே குளிரிலிருந்து காக்கும் கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சதாம் உசைன் தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் தனக்கு பிடித்தமான கோழி இறைச்சி மற்றும் சோற்றினை மகிழ்ச்சியோடு சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அவரது குழந்தை பருவத்திலிருந்தே வெந்நீரில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தின் படி அன்று பல கோப்பைகளில் தேன் கலந்து அருந்தியுள்ளார். பின்னர் தொழுகை செய்து விட்டு தனது கட்டிலில் அமர்ந்து திருகுர்ஆனை ஓதியுள்ளார். அவர் தூக்கு மேடையில் ஏற்றப்படுவதற்கு முன்னர் மாவீரனைப் போல் எந்த சலனமும் இல்லாமல் மலர்ந்த முகத்துடன் நோக்கி சென்றதாக இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post