எல்லையிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றும் தென்கொரியா - Yarl Thinakkural

எல்லையிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றும் தென்கொரியா


வடகொரியாவுடனான தனது எல்லைப் பகுதியில் தான் வைத்த பிரசார ஒலி பெருக்கிகளை தென்கொரியா அகற்ற ஆரம்பித்துள்ளது.
இதேபோன்று தம் தரப்பில் வைத்த பிரசார ஒலி பெருக்கிகளை வடகொரியாவும் அகற்றிக் கொண்டிருப்பதாக தாம் நினைப்பதாக தென்கொரியா கூறியுள்ளது.
பகைமையிலிருந்த இரு நாடுகளும் பரஸ்பரம் இன்னொரு நாட்டு மக்களிடையே தம் கருத்தைப் பரப்பும் நோக்கில் தங்கள் எல்லைப் புறத்தில் பெரிய ஒலிபெருக்கிகளை நிறுவி பிரசாரம் செய்து வந்தன.

கடந்த வாரம் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொரிய உச்சி மாநாட்டுக்கு பிறகு உறவு வலுப்பெறுவதன் குறியீடாக இந்த ஒலிபெருக்கிகளை அகற்ற ஆரம்பித்துள்ளது தென்கொரியா.
தென்கொரியா முதன்முதலாக 1960களில் இந்த ஒலிபெருக்கியை நிறுவியது. அப்போதிலிருந்து கொரியன் பொப் இசை முதல் செய்தி அறிக்கைகள் வரை பலவற்றை எல்லையில் ஒலிபரப்பி வந்தது.

வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு நாடுகளும் தங்களது ஒலிபரப்பை நிறுத்தி விட்டன. இன்று முதல் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், நண்பகல் வேளையில் ஒலிபெருக்கிகளை அகற்ற ஆரம்பித்தது. வடகொரியாவும் ஒலிபெருக்கிகளை அகற்றி வருவதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post