வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - Yarl Thinakkural

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


தமிழின படுகொலை நாளான மே 18ஆம் திகதியை வழமை போன்று நினைவு கூருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் 16ஆம் திகதி நேரடியாக அங்கு சென்று பார்வையிடவுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நான்காவது தடவையாக இடம்பெறும் இந்நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளானது, இறுதி யுத்தம் இடம்பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளது.
இவ் நினைவு நாளின் ஏற்பாடுகள் தொடர்பாக, வடக்கு மாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஏற்பாட்டு குழுவானது நேற்றைய தினம் காலை நேரடியாக சென்று ஆராய்ந்திருந்தது. இம்முறை முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவு நாள் நிகழ்வானது காலை 9.30மணிக்கு ஆரம்பாகவுள்ளதுடன் இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த மக்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அஞ்சலி சுடரனாது இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒவ்வொருவர் வீதமும், வடக்கு கிழக்கிற்கு வெளியே கொல்லப்பட்ட தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தி ஒருவருமாக ஒன்பது பேர் இப் பொதுச் சுடரை ஏற்றவுள்ளதுடன் இச் சுடர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக்கொடுக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து ஏற்கனவே தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 1500அஞ்சலி சுடர்கள் கலந்து கொண்டிருக்கும் மக்களால் ஏற்றி வைக்கப்படவுள்ளன. மேலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ள களத்தில் பொது மக்களுக்கான கொட்டைககள், தண்ணீர்ப் பந்தல்கள் மற்றும் அவர்களுக்கான ஏனைய வசதிகள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொது அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. அத்துடன் மைதான ஒழுங்கமைப்புக்களை முன்னாள் போராளிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, யாழ்.பல்கலைகழக மாணவர்களும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து இம் மே18 அஞ்சலி நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இதுவரை திட்டவட்டமான முடிவை பல்கலைகழக மாணவர்கள் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post