பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு உத்தரவு - Yarl Thinakkural

பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடற்கூறு அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைக்கும் வரை பதப்படுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மூன்று வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு பிற்பகல் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பலியானவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு நேற்று மேல்முறையீடு செய்தது.

 மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, எதிர்வரும் 30ஆம் திகதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறையென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும் அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.
Previous Post Next Post