திருமணத்தில் பயங்கரம்: மணமகனை சுட்டுக்கொன்ற நண்பர் - Yarl Thinakkural

திருமணத்தில் பயங்கரம்: மணமகனை சுட்டுக்கொன்ற நண்பர்


திருமணத்தின் போது, மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை அவரின் நண்பர் சுட்டதில் மணமகன் பரிதாபமாக பலியானார். வடமாநிலங்களில் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களின் பெருமையை உணர்த்துவது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இந்த வழக்கம் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்மிபூர்கேரி மாவட்டத்திலுள்ள ராம்பூர் கிராமத்தில் நேற்று திருமணம் இடம்பெறவிருந்தது.
மணமேடையில் மணமகன் சுனில் வர்மா அமர்ந்திருந்தார். மணமகனுக்குரிய சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. மணமகனுக்கு எதிர்த்திசையில் அவரின் நண்பர் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.
அப்போது திடீரென மணமகனின் நண்பர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை சுட்டார். இதில் முதல் குண்டு வெளியில் பாய்ந்தது. 2ஆவது குண்டு மணமகனின் மார்பில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து மணமகனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மணமகனைச் சுட்ட அவரின் நண்பர் தலைமறைவாகி விட்டார்.
அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post