முள்ளிவாய்க்காலில் அமைதியாக அழ விடுங்கள் - Yarl Thinakkural

முள்ளிவாய்க்காலில் அமைதியாக அழ விடுங்கள்



இழந்த எங்கள் உறவுகளை நினைந்து முள்ளிவாய்க்காலில் அமைதியாக எங்களை அழ விடுங்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர்கள் மூவர் நேற்று கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெவ்வேறு காரணங்களைக் கூறி தமிழின அழிப்பு நினைவேந்தல் நாளை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக ஏற்பட்டுள்ள இழுபறிகளை அடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னான், மூத்த உறுப்பினர்களான, பசீர் காக்கா என அழைக்கப்படும் முத்துக்குமார் மனோகர், பாலிப்போடி சின்னத்துரை, ஆத்மலிங்கம் ரவீந்திரா ஆகிய மூவரும் நேற்று யாழ்.ஊடக அமையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர். இதன்போது அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சூழலில் எமக்கான கடமையைச் செய்யாமலிருப்பது எம்மோடு நீண்டகாலம் பயணித்து மாவீரர்களான எமது நண்பர்கள், சகோதரிகளுக்கும், விடுதலையை நேசித்து முள்ளிவாய்க்கால் வரை எம்மோடு பயணித்து கடல், வான், தரை ஆகிய மும்முனைத் தாக்குதல்களால் இனப் படுகொலைக்குள்ளான எமது உறவுகளின் ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகம் எனக் கருதுகிறோம்.

கடந்த மாவீரர்நாள் தொடர்பாக எங்களில் ஒருவரான முத்துக்குமார் மனோகர் (காக்கா) விடுத்த வேண்டுகோளை ஏற்று எவ்வித அரசியல் கலப்புமின்றி அமைதியான முறையில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடாக அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின.

ஒழுங்கான நேர்த்தியான தமிழ்த் தலைமையால் 2009 மே 18 வரை வழிநடத்தப்பட்டோம் என்பதை முரசறைந்து கூறினர் எமது மக்கள். ஒற்றுமையாய் வாரீர் என்ற கோஷங்களுக்கு மத்தியில் வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறோம். தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெறாவிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என எச்சரிப்பது எம்மை வேதனையில் ஆழ்த்துகிறது.

எமது உறவுகளுக்காக மட்டுமல்லாது இன்றைய நிலைமைக்காகவும் சேர்த்து கண்ணீரைப் பங்கு போடுகிறது. மாவீரர்நாள் நிகழ்வுகளில் அமைதியைப் பேணிய எமது மக்களின் அமைதியையும் கட்டுப்பாட்டையும் மதிக்காததோடு எமது கடந்தகாலப் பங்களிப்பை எச்சரிப்போர் நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விடுதலைப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக ஆற்றிய பங்களிப்பை போராட்டத்தின் பங்காளர்களான நாம் நன்கு அறிவோம். மாவீரர்நாள் தொடர்பான தனது வேண்டுகோளில் மனோகர் (பசீர் காக்கா) இதனை மறக்காது குறிப்பிட்டிருந்தார் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.
எது எவ்வாறிருந்தாலும் உலகத்தைப் பொறுத்தவரை வடமாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலை என்ற தீர்மானம் காத்திரமானது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தது.

இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் எவரும் செயலாற்றக்கூடாதெனக் கருதுகிறோம். இத்தீர்மானத்தைக் கொண்டு வந்த வடக்கு முதல்வரின் பங்களிப்பை வேறெவரினதும் தேவைகளுக்கோ, நோக்கங்களுக்கோ நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

இந்த மே 18 க்குப்பின் நாம் எதிர்பார்க்கும் அரசியல் கலப்பற்ற, மதகுருமார் தலைமையிலான நினைவேந்தல் குழுக்களின் உருவாக்கம் குறித்து விடுக்கப்படும் பொது அறிவித்தலொன்றின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் மாவீரர் நாள், திலீபனின் நினைவு, அன்னை பூபதி, மாமனிதர் சிவராம் நினைவு உட்பட மே 18 நிகழ்வையும் கூட இந் நினைவேந்தல் குழுக்களின் அறிவுறுத்தல் பிரகாரம் நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

Previous Post Next Post