காந்தி சிலை முன் காங்கிரஸ் உண்ணா விரதம் - Yarl Thinakkural

காந்தி சிலை முன் காங்கிரஸ் உண்ணா விரதம்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களுர் சட்டப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களுர் சட்டப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக தரையில் அமர்ந்து உண்ணா விரத போராட்டம் நடத்தினர்.
இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலோட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜ.க. செயற்படுவதை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post