மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா - Yarl Thinakkural

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய பயணிகள் விமானத்தை கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தியது ரஷ்யப் படையிடம் இருந்த ஏவுகணை என விசாரணை நடத்தி வரும் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த விசாரணைக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளதாவது: மலேசியாவின் எம்.ஹெச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவின் "பியூகே-டெலார்' வகையை சேர்ந்த ஏவுகணையென குழு முடிவுக்கு வந்துள்ளது.

ரஷ்ய இராணுவப் பிரிவிடம் இருந்த ஏவுகணையால் தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சர்வதேச விசாரணை அதிகாரிகள் தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பி.யூ.கே. ஏவுகணையை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் வாங்கி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விசாரணைக் குழு கூறி வந்தது.

எனினும் தற்போது மிக கடினமான ஆய்வுகளுக்குப் பிறகு, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு அந்த ஏவுகணை ரஷ்யாவின் கர்ஸ்க் நகரிலிருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளின் இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

Previous Post Next Post