பாலியல் வன்கொடுமைக்கு பெண்களின் ஆடை காரணமென்பது முட்டாள் தனம் - Yarl Thinakkural

பாலியல் வன்கொடுமைக்கு பெண்களின் ஆடை காரணமென்பது முட்டாள் தனம்


பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக்கூறுவது முட்டாள் தனமானது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் ஆடை தான் காரணம் எனில் குழந்தைகள், முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏன் இடம்பெறுகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாலின பாகுபாடு தொடர்பான ஆய்வறிக்கை குறித்த பிக்கி அமைப்பின் கருத்தரங்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணுக்கு தெரிந்த நபரே அவரை பாலியல் வன்கொடுமை செய்தால் அதை எவ்வாறு வெளி நபர்களால் தடுக்க முடியும். ஆடை காரணமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். ஆடை தான் காரணமென்றால் முதியவர்களுக்கும், குழைந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை ஏற்படுவது ஏன்?
இதுபோன்று ஒவ்வொரு 10பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 7சம்பவங்கள் அதில் பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் ஏற்படுத்தப்படுவது தான். இவ்விவகாரத்தில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் பாகுபாடு பார்க்கப்படக்கூடாது. இதில் மாற வேண்டியது பெண்களின் ஆடையல்ல, ஆண்களின் மனநிலை தான் என்றார்.

Previous Post Next Post