வடமாகாண சபை ஏற்பாட்டிலேயே தமிழின படுகொலை நினைவேந்தல் - Yarl Thinakkural

வடமாகாண சபை ஏற்பாட்டிலேயே தமிழின படுகொலை நினைவேந்தல்


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஆண்டுகளைப் போன்றே இவ்வாண்டும் மே-18 ஆம் திகதி  வட மாகாண சபையின்  ஒழுங்கமைப்பில் இடம்பெறும் என முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
நினைவேந்தல் ஒழுங்கமைப்பு குறித்து ஆராய்வதற்காக முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவராலும் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். எல்லோருடனும் இணைந்தே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வட மாகாண சபை நடத்த விரும்புகிறது.
இந்நினைவேந்தலில் மாகாண சபையுடன் இணைந்து கொள்ள விரும்பும் அமைப்புக்கள் நாளை புதன்கிழமை  நடைபெறும் கலந்துரையாடலுக்கு  வருமாறும் முதலமைச்சர் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் வட மாகாண சபை கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறது.
தொடர்ச்சியாக இந்த வருடமும் மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாண சபையால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடம் பிரதேச சபைக்குரியது. பிரதேச சபை எனது அமைச்சின் கீழ் வருவதால் அதனை நான் பார்த்துக் கொள்வேன் எனவும் அவர் கூறினார்.
நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களுக்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒழுங்கமைப்புக்களை செய்யும். அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு பேரவலத்தின் நினைவேந்தல் என்பதால் பல அமைப்புக்கள் நினைவேந்தலில் எங்களுடன் பங்குபற்ற விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
அவ்வாறு விரும்பும் அமைப்புக்களை சார்ந்த தலா இரு உறுப்பினர்கள் நாளை 9ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்குபற்றி தங்களுடைய கருத்துக்க ள் மற்றும் ஆலோசணைகளை கூறலாம்.
இந்த கலந்துரையாடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்பு குழு பங்குபற்றும். ஆகவே இந்த அழைப்பை பகிரங்க அழைப்பாக நாங்கள் விடுகிறோம் என முதலமைச்சர் மேலும் கூறினார்.

Previous Post Next Post