முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த தடை: வைகோ, திருமுருகன் காந்தி கைது - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த தடை: வைகோ, திருமுருகன் காந்தி கைது


சென்னை மெரினா பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணியை நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலளார் வைகோ, திருமுருகன் உட்பட பொதுமக்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு பேரணியை மெரினாவில் நடத்துவதற்காக பல்வேறு தமிழ் இயக்கங்களை சேர்ந்தவர்களுடன், மே-17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை கூடினர். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கனவே என சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
பேரணி மற்றும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுத்த பொலிஸார், வீதியை தடுப்புகள் வைத்து அடைத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து மெரினாவுக்கு செல்லும் திருவல்லிக்கேணி பாரதி வீதியையும் மூடினர்.
இதனிடையே பொலிஸாரின் தடையை மீறி மெரினா கடற்கரையை நோக்கி பேரணியினர் செல்ல முயன்றனர். எனினும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து பேரணியில் கலந்து கொண்ட வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கைது செய்தனர்.
Previous Post Next Post