யாழ்ப்பாணம் நகைக்கடையில் திருடிய சிங்கள பெண் - Yarl Thinakkural

யாழ்ப்பாணம் நகைக்கடையில் திருடிய சிங்கள பெண்



யாழ்.நகரத்தில் உள்ள நகைக்கடையொன்றில் 2இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான காப்புகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம்-கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடையொன்றுக்கு சென்ற சிங்கள பெண்ணொருவர் காப்பு வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் பலவிதமான காப்புகளை பார்ப்பதற்காக எடுத்து கொடுத்துள்ளார்.

குறித்த பெண் தான் ஒரு சோடி காப்புக்களை வாங்குவதாக தெரிவித்து வங்கியில் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் நகைக்கடை உரிமையாளர் நகைகளை பரிசோதித்த போது அதில் இரண்டு சோடி காப்புக்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடையிலிருந்த கண்காணிப்பு கமராவின் பதிவுகளை பரிசோதித்த போது குறித்த பெண் இலாவகமாக காப்புக்களை திருடுவது தெரிய வந்தது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பபட்டது. பொலிஸாரின் விசாரணையை தொடர்ந்து கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது குறித்த பெண்ணை நிபந்தனையுடனான பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

Previous Post Next Post