காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆட்கொணர்வு மனு விசாரணை: நீதிமன்றத்தில் வைத்தே அச்சுறுத்திய இராணுவம்! - Yarl Thinakkural

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆட்கொணர்வு மனு விசாரணை: நீதிமன்றத்தில் வைத்தே அச்சுறுத்திய இராணுவம்!

யாழ்.மேல் நீதிமன்றில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவினை மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. 

அதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனால் அச்சத்திற்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர். பின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறவில்லை.

நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி , யாழ்.பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர்.

இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள்.

அதன் போது , மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது , அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை என கூறி சென்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post