கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இராஜினாமா - Yarl Thinakkural

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இராஜினாமா

கர்நாடக சட்டப்பேரவையில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்வர் எடியூரப்பா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து ம.ஜ.த. மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி புதன்கிழமை கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.-104, காங்கிரஸ்-78, ம.ஜ.த.-பகுஜன் சமாஜ் கூட்டணி-38, ஏனையவை 2ஆகிய இடங்களை பெற்றன. இதில் எக்கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை (112இடங்கள்) கிடைக்கவில்லை.
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான ம.ஜ.த.வுக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து ம.ஜ.த. மாநில தலைவர் குமாரசாமி ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பாவும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 15நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எடியூரப்பா பதவியேற்ற‌தை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சனிக்கிழமை 4மணிக்கு அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவை மாலை 3.30மணிக்கு கூடியது. அப்போது அவையில் பேசிய முதல்வர் எடியூரப்பா, சட்டப்பேரவையில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ், சுயேட்சை ஆதரவை பெற்றுள்ள ம.ஜ.த. மாநில தலைவர் குமாரசாமியை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இவருக்கு 117எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் அவர் முதல்வராக பொறுப்பேற்கிறார். பேரவையில் தனது பெரும்பான்மையை குமாரசாமி 15நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Previous Post Next Post