'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி ஒளிபரப்ப தடை - Yarl Thinakkural

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி ஒளிபரப்ப தடை

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்யாணசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் தனியார் தொலைக்காட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30மணிக்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் தொகுத்து வழங்குகிறார். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். தொகுப்பாளர் பல்வேறு தனிமனித மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் தலையிடுகிறார்.

தொகுப்பாளரின் கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு சரியான முறையில் மரியாதை அளிப்பதில்லை. விபரம் தெரியாத ஆண், பெண்களை குறிவைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அத்தொலைக்காட்சி 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைகால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Previous Post Next Post