மனம் மாறிய ட்ரம்ப்: கிம்முடன் பேச சம்மதம் - Yarl Thinakkural

மனம் மாறிய ட்ரம்ப்: கிம்முடன் பேச சம்மதம்

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னர் திட்டமிட்டவாறு எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிப்படையான விரோதத்தை வடகொரியா தெரியப்படுத்தியதால் பேச்சுவார்த்தையை இரத்து செய்வதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேசத் தயாராகவுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
ஜூன் 12இல் நடக்கவிருந்த அமெரிக்கா - வடகொரியா உச்சி மாநாட்டை ட்ரம்ப் இரத்து செய்ததையடுத்து முடிவு மிகுந்த வருத்தமளிப்பதாக வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் க்யே-க்வான் தெரிவித்தார்.
இதையடுத்து வடகொரியாவிடமிருந்து ஆக்கபூர்வமான அறிக்கை வந்திருப்பது நல்ல செய்தி. இது எங்கே முன்னெடுத்து செல்லும் என விரைவில் நாம் பார்ப்போம். நீடித்த வளம் மற்றும் அமைதியை அடைய இவை உதவும் என நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் நேரமும் செயல்திறனும் தான் இதற்கு பதிலளிக்குமென ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வடகொரிய சந்திப்புக்கு விருப்பம் வெளியிட்ட நிலையில் அதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Previous Post Next Post