வடமாகாண சபையின் முடிவு கவலையளிக்கின்றது -மாணவர் ஒன்றியம் கருத்து- - Yarl Thinakkural

வடமாகாண சபையின் முடிவு கவலையளிக்கின்றது -மாணவர் ஒன்றியம் கருத்து-


முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வை வடமாகாண சபை நடத்துவது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் பலர் பிரிந்து நிற்கும் நிலைக்கே மீளவும் இட்டுச்செல்லும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்வை கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வட மாகாண சபையே முன்னெடுத்தது. இந்தாண்டு வட மாகாண சபை ஏற்பாட்டிலேயே நினைவேந்தல் நடைபெறும் என வட மாகாண சபை முதலமைசமசர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர்.
இது குறித்து நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாணவர் ஒன்றியம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. மாணவர் ஒன்றியத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.
பல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள் கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டுவரும் போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மனவேதனையைத் தந்திருக்கிறது.
தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள் தான் மே-18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று.
எனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.
Previous Post Next Post