மக்களை குறி பார்த்து சுட்ட பொலிஸார் - Yarl Thinakkural

மக்களை குறி பார்த்து சுட்ட பொலிஸார்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொலிஸார் எவ்வித அறிவித்தலும் கொடுக்காமல் திடீரெனவே துப்பாக்கி சூட்டை நடத்தினர்.
மக்கள் உயிரிழக்க வேண்டுமென தலை நெஞ்சுப் பகுதிகளை குறி வைத்தே சூடு நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்நபர் மேலும் கூறுகையில்: காலை 9.30மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம் நடத்தாத வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்தனர். பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
பந்தல்களும் போடப்பட்டன. ஆனால் திடீரென மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர்.
பல்வேறு குழுக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன. முதலில் வி.வி.டி .சிக்னல் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். சில பெண்களை பொலிஸார் அடித்தனர். இதைப் பார்த்த கிராம மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பொலிஸார் மீது கல்வீசித் தாக்கினர். அப்போது பொலிஸார் குறைவாக இருந்ததால் சென்று விட்டனர்.


அடுத்து நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டோம். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். அப்போதும் பொலிஸார் அங்கிருந்து சென்று விட்டனர்.
கிராம மக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது அங்கே 60பொலிஸார் மட்டுமே இருந்தனர். அவர்கள் எங்கள் மீது தடியடி நடத்தினர். அப்போதும் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
அவர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சு மற்றும் தலையை குறி வைத்து சுட்டனர். சுடப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றார்.

Previous Post Next Post