ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - Yarl Thinakkural

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு வைக்கவுள்ளதாக பொலிஸாருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டறைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு எடுத்த நபர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கவுள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பொலிஸார் உசார்ப்படுத்தப்பட்டனர்.
முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸாரின் வெடிகுண்டு நிபுணர் முதல்வர் இல்லத்தில் சோதனையிட்ட போது எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
எனினும் முதல்வர் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அதே எண்ணிலிருந்து அதே நபர் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டி விட்டு அழைப்பை துண்டித்தார்.
ஒரே நேரத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பொலிஸார் பதற்றமடைந்துள்ளனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு கடலூரிலிருந்து வந்தமை தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் புரளி என்பது தெரியவந்தது.

Previous Post Next Post