தென் சீனக்கடலில் ஆயுதங்களை குவிக்கும் சீனா - Yarl Thinakkural

தென் சீனக்கடலில் ஆயுதங்களை குவிக்கும் சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்கள் குவிப்பில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தென்சீனக் கடல் பகுதி முழுவதும் தங்களுடையது தான் என சீனா தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா திடீரென ஆயுத குவிப்பில் ஈடுபட்டுள்ளது. தென் சீன கடலை அண்மித்துள்ள பகுதிகளில் சீனா நில இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த 30நாட்களுக்குள் இந்த ஏவுகணைகள் அடங்கிய கப்பல்கள் பியரி கிராஸ் ரீப், சுபி ரீப் மற்றும் மிச்சிப் ரீப் ஆகிய தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது அந்த செய்திகளை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post