“ஒப்ரேசன் ஆவா” யாழ்.பொலிஸாரின் அதிரடி நகர்வு: - Yarl Thinakkural

“ஒப்ரேசன் ஆவா” யாழ்.பொலிஸாரின் அதிரடி நகர்வு:

யாழ்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

"யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் வன்முறைகள் அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ஒப்ரேசன் ஆவா என்ற பொலிஸ் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவினரே இந்தச் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

இரண்டு வாரங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபரை தாவடிப் பகுதியில் வைத்து இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 8 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து 8 பேர் கொண்ட ஆவா குழுவினர் இருவரை சாராமாறியாக வெட்டினர். அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். பிரதேச மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபை விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்" என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் பகுதியில் கடந்த ஆண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்ட சம்பவ தொடர்பான வழக்கிலும் இந்த இளைஞர் சந்தேகநபராக உள்ளார்" என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post