யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கைகள் சரியா? - Yarl Thinakkural

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கைகள் சரியா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அவர்களே தம்மை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல்வாதிகள் வரவேண்டாம் என கூறுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. அந்த முறையை பல்கலைக்கழக மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும் என்கிறார்கள். அரசியல்வாதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல.
இந்த மக்களிடமிருந்து வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கௌரவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனியே பல்கலைகழக மாணவர்களால் நடாத்தப்படவில்லை. வட மாகாண சபை உறுப்பினர்கள் 36பேர் தலா 7ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வழங்கினார்கள். யாழ்.வர்த்தக சங்கம் ஈகை சுடர்களுக்கான துணியை வழங்கியிருந்ததது.

அதேபோல் ஈகை சுடர்களுக்கான கம்பிகளை முன்னாள் போராளிகள் வழங்கியிருந்தார்கள். அவ்வாறு பலர் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்த நிலையில் சகலருக்குமான கௌரவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் நினைவேந்தல் ஒழுங்கமைப்பிலும் பாரிய தவறுகள் நடந்துள்ளன. குறிப்பாக பிரதான சுடர் ஏற்றப்படும் போது அங்கே முறையான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை.

உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை. இந்த பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டனவா? என நாங்கள் கேள்வி எழுப்ப விரும்புகிறோம் எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

முள்ளிவாய்க்காலில் முல்லைத்தீவு மக்கள் மட்டும் சாகவில்லை வட-கிழக்கு மற்றும் மலைகய மக்களும் கொல்லப்பட்டார்கள். ஆகவே வட-கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்து 9பேர் முதலமைச்சருடன் இணைந்து ஈகை சுடரை ஏற்றவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணம் சார்பில் யாருமே இல்லை.

இது குறித்து கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் எங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  இச்சந்தர்ப்பதில் நான் கிழக்கு மாகாண மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கறுப்பு உடை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நின்றதே பல்கலைக்கழக மாணவர்கள் செய்த சாதனை. பல்கலைக்கழக மாணவர்கள் தம்முடைய செயற்பாடுகளை ஒரு தடவை சீர்தூக்கி பார்க்க வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post