மருத்துவத்துறை மாணவர்களை பாடாய்ப்படுத்தும் நீட் தேர்வு - Yarl Thinakkural

மருத்துவத்துறை மாணவர்களை பாடாய்ப்படுத்தும் நீட் தேர்வு


மருத்துவ கற்கையை தொடர்வதற்காக நடத்தப்படும் நுழைவுப்பரீட்சையான நீட் தேர்வு இந்தியா முழுவதும் இன்று இடம்பெற்றது. இப்பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் கடும் சோதனைக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
நேற்று நீட் தேர்வு எழுத சென்ற மாணவிளை சோதனை என்ற பெயரில் தோடு, மூக்குத்தி அகற்ற சொல்லியும், பின்னிய தலைமுடியை அவிழ்த்து விட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1.07இலட்சம் பேர் உட்பட மொத்தம், 13.27இலட்சம் மாணவர், மாணவியர் நீட் தேர்வில் பங்கேற்றனர். மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ். ஏற்கனவே அறிவித்திருந்த கட்டுப்பாட்டு விதிகளின் படி மாணவிகளின் நகைகள் அகற்றப்பட்ட பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பின்னல் போட்டிருந்த மாணவிகள் முடியை விரித்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மின்னணு பொருட்கள், ஷ_, முழுக்கை சட்டை, ரி-சேர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, நகைகள், புடவை, பர்தா, தொப்பி, பிஜாமா, குர்தா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அரைக்கை சட்டை, செருப்பு, கால்சட்டை, ஜீன்ஸ், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருமணமான பெண்கள் தாலி, வளையல் அணிய அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களை சங்கடப்படுத்தும் வகையிலான நீட் தேர்வால் தனது மருத்துவ கனவை பறிகொடுத்த அனிதா என்ற மாணவி கடந்த வருடம் தற்கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post