அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்த வடகொரியா - Yarl Thinakkural

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்த வடகொரியா

அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்து கொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வடகொரியா கூறியுள்ளது.
ட்ரம்ப்-ஹிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பை உலக நாடுகள் பல ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.
தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராகவுள்ளதாக வடகொரியா கூறிய பின்னர் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது.
அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களை கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்ட போதிலும் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹிம் கீ-க்வான் கூறியதாக வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வடகொரியா, தென்கொரியாவுடன் நேற்று இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை இரத்து செய்தது.
இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. கூறியுள்ளது.
எனினும் ட்ரம்ப்- ஹிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, பேச்சுவார்த்தை குறித்து வடகொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளது.


Previous Post Next Post