தொப்பி அளவானால் போடுங்கள்: -முன்னாள் மேயருக்கு இன்னாள் மேயர் அறிவுரை- - Yarl Thinakkural

தொப்பி அளவானால் போடுங்கள்: -முன்னாள் மேயருக்கு இன்னாள் மேயர் அறிவுரை-

யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் முன்னாள் மேயரும் இன்னாள் சபை உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கு அறிவுரை கூறியுள்ளார். 

முhநகர சபையின் விசேட அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போது நீர் பம்பிகள் கொள்வனவு செய்வதற்காக சபையின் அனுமதி மேயரால் கோரப்பட்டிருந்தது. 

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் கடந்த வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நீர்பம்பி ஒரு வருடத்தில் செயலிளந்துள்ளது. அதன் தரம் தொடர்பில் ஆராயாமல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் இவ்வருடம் கொள்வனவு செய்யப்படவுள்ள நீர்பம்பியின் பயன்படு காலம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா அந்த நீர்பம்பியின் பயன்படு காலம் தொடர்பில் ஆராய்ந்த பின்பே கொள்வனவு செய்யப்பட்டது என்றும், யாழ்.மாநகர சபையினால் கொள்வனவு செய்யப்படும் அனைத்து பொருட்களும் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்நத பின்னரே கொள்வனவு செய்யப்படும் என்றார். 

இதன் போது கருத்து வெளியிட்ட மேயர் இமானுவேல் ஆனோல்ட் கடந்த முறை கொள்வனவு செய்யப்பட்ட நீர் பம்பி ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்படவில்லை. 

நீங்கள் ஏன் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்வதுபோல் எண்ணி பதில் கூறுகின்றீர்கள். உங்கள் தொடர்பில் கருத்துக்கள் வெளியிட்டால் மட்டும் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று “தொப்பி அளவானால் போடுங்கள்” என்ற தொணியில் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கு இன்னார் மேயர் இமானுவேல் ஆனோல்ட் அறிவுரை கூறியிருந்தார். 

Previous Post Next Post