முதலமைச்சருக்கு எதிரான பேச்சு; மாநகர சபையில் வரவேற்பு! - Yarl Thinakkural

முதலமைச்சருக்கு எதிரான பேச்சு; மாநகர சபையில் வரவேற்பு!

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை எதிர்க்கும் வகையில் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் தெரிவித்த கருத்திற்கு யாழ்.மாநகர சபை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஆதரவு ஒலி எழுப்பப்பட்டது. 

குறிப்பாக சபை அமர்வில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களினாலேயே இவ்வாதரவு ஒலி எழுப்பப்பட்டிருந்தது. 

யாழ்.மாநகர சபையின் விசேட அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் யாழ்.மாநகர சபையின் முறைகோடுகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் மனுக் கையளிக்கப்பட்டிருந்தது. 

இவ்விடயம் தொடர்பில் நேற்றை விசேட அமர்விலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட உறுப்பினர் மு.ரெமிடியஸ் முதலமைச்சர் யாழ்.மாநகர சபையின் ஆழுகைக்கு உட்பட்ட விடயங்களில் கலந்து கொள்வதற்கு யார்? ஏன்று கேள்வி எழுப்பியதுடன், முதலமைச்சர் குறித்த மனு தொடர்பில் மேயருக்கு பதில் வழங்கியது தவறு என்ற வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். 

இவ்வாறு முதலமைச்சருக்கு எதிராக அவர் கருத்து வெளியிடும் போது சபையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும் மேசைகளில் கைகளை தட்டி ரெமிடியசின் முதலமைச்சருக்கு எதிரான கருத்திற்கு தமது ஆரவாரமான ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post