ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் -தற்கொலை செய்த மாணவன் கடிதம்- - Yarl Thinakkural

ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் -தற்கொலை செய்த மாணவன் கடிதம்-


தந்தையின் மது பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த மாணவரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவி குளத்தை அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் (வயது-17). 12ஆம் வகுப்பில் படித்து வருகின்றார்.
தந்தையின் மது பழக்கத்தால் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதனால் மது பழக்கத்தை விடுமாறு தந்தையிடம், தினேஷ் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பாளையங்கோட்டை அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் மாணவர் தினேஷ் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் தினேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேம்பாலத்தில் தொங்கியவாறு இறந்து கிடந்ததால் யாரேனும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகமடைந்தனர்.இந்நிலையில் தினேஷின் சேட்டிலிருந்து பொலிஸார் கடிதமொன்றை கைப்பற்றினர். அக்கடிதத்தில், என் இறப்புக்கு பிறகாவது நீ (தந்தை) குடிக்காமல் இருக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசை என எழுதப்பட்டிருந்தது.
மேலும் அந்த கடிதத்தில், தனக்கு கொள்ளி வைப்பது உட்பட எந்த இறுதி சடங்கையும் என் தந்தை செய்ய கூடாது. அதை என் சித்தப்பா மேற்கொள்ளட்டும். பிரதமரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். இல்லாவிடில் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என மாணவன் எழுதியுள்ளார். மதுபானம் மற்றும் மது பழக்கத்துக்கு எதிராக மாணவன் உயிரிழந்துள்ளமை நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post