மலேசியாவில் 61ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் நடந்த பொது தேர்தலில் 92வயது நிரம்பிய அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாதிர் மொஹமத் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார்.
92வயதாகும் அவர் 60ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிலிருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில் தோற்கடித்தார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜீப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மஹாதிர் மொஹமத் தேர்தலில் களமிறங்கினார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69சதவீதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட மஹாதிர் மொஹமத் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
222உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் மஹாதிர் மொஹமத் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 115இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112இடங்கள் தேவையாகும். இந்நிலையில் எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றியது. சுதந்திரமடைந்து 61ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.