இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 32கிலோ தங்கம் - Yarl Thinakkural

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 32கிலோ தங்கம்


இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்தி செல்லப்பட்ட 32கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் 2பெண்கள் உட்பட 6பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கும்பலொன்று தங்க கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பிரகாரம் நேற்று காலை சென்னை மண்ணடி பகுதியில் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த இளைஞனை பின் தொடர்ந்தனர். அந்த இளைஞன் விடுதியொன்றிலிருந்து பொதியை எடுத்து சென்றார். அவரை பிடித்த அதிகாரிகள் பொதியை சோதனையிட்டனர். அதில் 12.149கிராம் தங்க கட்டிகள் இருந்தன.
இதையடுத்து குறித்த விடுதியிலிருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 12கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், விடுதியிலிருந்த மேலும் ஒரு வாலிபரும் பெண்ணும் பிடிபட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இராமேஸ்வரம் கடற்கரையில் பகுதியிலிருந்து கீழக்கரையை சேர்ந்த ஒரு பெண் சென்னை செல்லும் பேருந்தில் தங்க கட்டிகளை கடத்தி செல்வதாக வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருவாய் அதிகாரிகள் பேருந்தில் தங்க கட்டிகளை கடத்தி சென்ற பெண்ணை பிடித்து அவரிடமிருந்த 8.1கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Previous Post Next Post