மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 3 தமிழர்கள் - Yarl Thinakkural

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 3 தமிழர்கள்

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெறும் 13 பேரும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை உறுதியுரையெடுத்து பதவியேற்றனர்.

வடக்கு - கிழக்கைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் திருமதி சிறிநிதி நந்தசேகரன், என்.எம்.எம் அப்துல்லா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் ஆகிய மூவரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேரும் தமது கடமைகளை வரும் 14ஆம் திகதி திங்கட்கிழரமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாண மேல் நீதிமன்ற அமர்வுகளில் பொறுப்பேற்பர்.

வவுனியா மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளார். அவர், வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு 2002ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த அவர், 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டுவரை ஊர்காவற்றுறை மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்ட அவர், மீளவும் 2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகிய அவர்,  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், வரும் திங்கட்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையைப் பொறுப்பேற்பார். அத்துடன் கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வுகளிலும் அவர் கடமையாற்றுவார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு - கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார். சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமையாற்றினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லா, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் திங்கட்கிழமை கடமையைப் பொறுப்பேற்பார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக 14 ஆண்டுகளாகக் கடமையாற்றும் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவைக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.

2004ஆம் ஆண்டு அரச சட்டவாதியாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் சேவையை ஆரம்பித்த அவர்,  யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், மற்றும் கல்முனை  என வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை மேல் நீதிமன்றங்களிலும் அரச சட்டவாதியாகக் கடமையாற்றினார்.

2014ஆம் ஆண்டுவரை அரச சட்டவாதிய சேவையாற்றிய அவரை, மூத்த அரச சட்டவாதியாக பதவியுயர்வு சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை மேன்முறையீட்டு நீதிமன்றில் அரச சட்டவாதியாக கடமையாற்றிய டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவைக்குள் உள்வாங்கப்படுகிறார்.

அத்துடன், குடியியல் மற்றும் குற்றவியல் என இரண்டு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், வரும் திங்கட்கிழமை கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையைப் பொறுப்பேற்பார்.

சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதிகளை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் வழக்காறுக்கு அமைய சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று பிரதமர் நீதியரசரால் டெனிஸ் சாந்தன் சூசைதாஸனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நியமனம் வழங்கப்படுகிறது.

நீதித்துறையால் பின்பற்றப்படும் இந்த வழக்காறுக்கு அமைய மூத்த அரச சட்டவாதி ஒருவர் நீதிவானாக கடமையாற்றாமல் நேடியாக மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவர்.


Previous Post Next Post