மசூதியில் தற்கொலை தாக்குதல்: 24பேர் பலி - Yarl Thinakkural

மசூதியில் தற்கொலை தாக்குதல்: 24பேர் பலி


ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 24பேர் பலியாகியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள முபி நகரிலுள்ள இந்த மசூதியில் பிற்பகல் தொழுகைக்காக முஸ்லிம்கள் தயாராகி கொண்டிருந்த போது மசூதிக்கு உள்ளேயும், வெளியேயும் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
பிற்பகல் 1மணிக்கு மசூதியில் முதல் குண்டு வெடிப்பு நடந்ததாகவும், தொழுகையாளர்கள் தப்பி ஓடிய போது மற்றொரு குண்டுதாரி மசூதிக்கு அருகே குண்டை வெடிக்கச் செய்ததாகவும் மாகாண பொலிஸ் ஆணையாளர் அப்துல்லாஹி யெரிமா தெரிவித்துள்ளார். 59இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போகோஹராம் தீவிராவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் வன்முறைத் தாக்குதல்களை போகோஹராம் தீவிரவாதிகள் தொடுத்து வருகின்றனர். இந்த வன் செயல்களால் 20ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post