பிரபாகரன் 2002இல் கூறியது என்ன? -நினைவுகளை மீட்கும் திருமாவளவன்- - Yarl Thinakkural

பிரபாகரன் 2002இல் கூறியது என்ன? -நினைவுகளை மீட்கும் திருமாவளவன்-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வவுனிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரண்டு தடவை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியவர். பிரபாகரனுடனான சந்திப்பின் போது நடந்த அனைத்தையும், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் நடந்த மே-17 தமிழீழ முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசிய உரையின் முழு வடிவம்: நான் 2002ஆம் ஆண்டு பிரபாகரனை சந்தித்தேன். எங்களை வரவேற்று, மார்போடு கட்டித் தழுவி வரவேற்றார். உடனே எங்களை அழைத்துக்கொண்டு மதிய உணவில் அமரவைத்தார். அவருடைய வலது பக்கத்தில் எனக்கு இருக்கை போட்டு உட்கார வைத்தார். இலை போடப்பட்டது. எல்லோருக்கும் வறுத்த கோழி வைக்கப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து அவர் கோழி கறியை சாப்பிடுகிற போது என்னுடைய இலையைப் பார்த்தார்.

'எங்கே தம்பிக்கு கறி வைக்கவில்லையா? கோழி வைக்கவில்லையா?' என்று கேட்டார். 'நான் சாப்பிடுவதில்லை அண்ணா” என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்து, 'இது என்ன சைவ சிறுத்தையாக இருக்கிறது. கோழிக்கறி சாப்பிடுவதில்லை என்றால் உடம்புக்கு எப்படி தெம்பு வரும்?' என்று அந்த இடத்தில் நகைச்சுவையாகப் பேசினார்.

மறுநாள் பிரபாகரனை அதிகாலை வேளை சந்தித்தேன். அப்போது ஒரு மணித்தியலாயம் என்னுடன் பேசினார். பேச்சின் முடிவில் எழுந்து, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நெஞ்சோடு என்னை அணைத்து 'உங்களுக்காக ஒரு அண்ணன் இங்கே இருக்கிறேன். தைரியமாக நீங்கள் போராடுங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி அனுப்பினார்.

2004ஆம் ஆண்டு நடந்த சந்திப்பில், நீண்ட நேரம் பேசினார். தமிழ்நாட்டில் சாதி தான் தமிழர்களை ஒருங்கிணைக்க விடாமல் தடுக்கிறது. அவன் தமிழைப் பெருமையாக நினைப்பதை விட, கேவலம் சாதியைப் பெருமையாக நினைக்கிறான். சாதிப்பெருமை தமிழர்களின் ஒற்றுமையை சீரழித்துக் கொண்டிருக்கிறது என குமுறினார்.

பிரபாகரனோடு நான் பேசியது, படம் எடுத்துக்கொண்டது, வீடியோவாகவும், படங்களாகவும் இருந்தன. அவற்றை தருமாறு கேட்டேன். அவர் சொன்னார், எல்லாவற்றையும் இங்கேயே வைத்துவிட்டுப் போங்க. அங்கே போனால் ஜெயலலிதா ஏர்போர்ட்டிலேயே பிடுங்கி விடுவார். உங்களை கைது செய்வார்கள்.  நான் அவற்றை பத்திரமாக வைத்திருக்கின்றேன். ஈழம் மலரும் போது உங்களை அழைப்பேன். அப்போது உங்களிடத்திலே தருவேன் என்று 2002இலே சொன்னார். அவர் அப்படி சொன்ன போது எனக்கு மெய்சிலிர்த்து போனது. என்று திருமாவளவன் கூறியபோது உணர்ச்சி வசப்பட்டார்கள் தொண்டர்கள்.

Previous Post Next Post