மே 18 விவகாரம்: பல்கலை மாணவர்களின் செயற்பாடு கவலை தருகிறது -சி.வி.விக்னேஸ்வரன்- - Yarl Thinakkural

மே 18 விவகாரம்: பல்கலை மாணவர்களின் செயற்பாடு கவலை தருகிறது -சி.வி.விக்னேஸ்வரன்-

வடக்கு மாகாண சபையினால் தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை உரிய மரியாதையுடன் அனுஸ்ரித்து வரும் நிலையில், குறுக்கிட்டு நாங்கள் செய்ய போகிறோம், நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்திருப்பது அழகானதொரு செயற்பாடு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்களினால் முள்ளிவாய்க்கால் நிலைவேந்தர் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பல்கலைகழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எங்களுக்கு சொல்லாமல் தாங்கள் ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு தெரியாது. இந் நினைவு நாளை நாங்கள் முன்னின்று செய்யப்போகின்றோம் அதற்கு உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் என அவர்கள் முதலே எங்களுடன் கேட்டிருந்தால் நாங்கள் அது தொடர்பாக ஏனைய மாகாண சபை உறுப்பினர்களோடும் கலந்துரையாடி ஒர் தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

அதே நேரம் வடக்கு மாகாண சபை மூன்றாண்டுகளாக இதனை ஒழுங்காக செய்து வரும் நிலையில் நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என  அவர்கள் கூறியிருப்பது அழகானதொரு செயற்பாடு அல்ல.

மேலும் அந்நிகழ்வை யாரேனும் செய்யாதிருந்தால் அதனை இவர்கள் எடுத்து செய்திருந்தாலும் அதனை நாம் வரவேற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இதனை இப்படி செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடைய இந் நடவடிக்கை எனக்கு மன வருத்தை தருகின்றது என்றார்.

Previous Post Next Post